தொல்காப்பியத்தில் குறிக்கப்பெறாது இளம்பூரணரால் தம் உரையில் இணைத்துக்கொள்ளப்பட்ட உத்திவகைகளுள் ‘மாட்டேறு’ என்பதும் ஒன்று. ‘மாட்டெறிதலாவது முன்னொரு பொருள் கூறிப் பின்வருவதும் அதுபோலுமென்றல். அஃதாவது உகர விறுதி அகர வியற்றே என வரும்’ (பொருள். 656, இளம். ப. 235) என்று மாட்டேறு குறித்து விளக்கமளித்துள்ளார் இளம்பூரணர்.
மனனக்கல்வி முறையைக் கருத்தில்கொண்டு தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூல்கள் பெரும்பாலும் நுட்பமான, செறிவான நூற்பாக்களைக் கொண்டமைந்துள்ளன. பல இடங்களில் முன் நூற்பாவில் குறிக்கப்பட்ட பொருண்மையைத் தொடர்ந்துவரும் நூற்பாவிலும் குறிக்கவேண்டியிருப்பின் முன் நூற்பாவில் உள்ள தொடர்களை அப்படியே எடுத்தாளாமல் ‘அவைதாம்’, ‘அவற்றுள்’ முதலிய சொற்சீரடிகளைப் பயன்படுத்தி முன் நூற்பாவோடு பின் நூற்பாவைத் தொடர்புபடுத்தியுள்ள பாங்கினைத் தொல்காப்பியத்துள் காணமுடிகிறது. தொல்காப்பிய எழுத்ததிகார முதல் இரு நூற்பாக்களே இந்த அமைப்பிற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.
நேரடியாக முந்தைய நூற்பாக்களோடு மட்டும் தொடர்புபடுத்தும் இந்த அமைப்பைப் போன்றே மற்றுமொரு அமைப்பையும் தொல்காப்பியத்துள் காணமுடிகிறது. நூற்பா ஒன்றில் கூறப்பட்ட விதி அந்நூற்பாவைத் தொடர்ந்துவரும் நூற்பாவிற்கோ பின்னர் வேறொரு இடத்தில் வரும் நூற்பாவிற்கோ பொருந்துவதாக இருப்பின் முன் நூற்பாவில் சொல்லப்பட்ட விதி மீண்டும் பின்னர் வரும் நூற்பாக்களில் கூறப்படாமல் ‘அன்ன இயற்று’, ‘இயல’, ‘அற்றென மொழிப’ என்பன போன்ற சீர்களால் முன் நூற்பாவோடு இயைபுபடுத்தப்பட்டிருக்கும். இவ்வாறு முன்னர் வந்த விதிகளைச் சொல்லும் நூற்பாவோடு பின்னர் விதி இயைபு கருதித் தொடர்புபடுத்தப்பட்ட நூற்பாக்களையே உரையாசிரியர்கள் மாட்டேறு பெறவந்த நூற்பாக்கள் எனக் குறித்துள்ளனர்.
தொல்காப்பியர் மாட்டேறு என்பதைத் தனி உத்தியாகக் காட்டவில்லையெனினும் மாட்டேறு பெறுமாறு பல நூற்பாக்களைத் தம் நூலுள் அமைத்துள்ளார். தொல்காப்பியத்துள் ஒரு இயலுக்குள்ளாகவும் இயல்களைக் கடந்தும் நூற்பாக்கள் மாட்டேறு பெற்றுள்ளன. காட்டாக,
ஒடுமரக் கிளவி யுதிமர இயற்றே. (எழுத்து. 263, இளம்.)
சேஎன் மரப்பெயர் ஒடுமர இயற்றே. (எழுத்து. 279, இளம்.)
விசைமரக் கிளவியும் ஞெமையும் நமையும்
அவைமுப் பெயருஞ் சேமர இயல. (எழுத்து. 283, இளம்.)
இல்ல மரப்பெயர் விசைமர இயற்றே. (எழுத்து. 314, இளம்.)
இந்நூற்பாக்களில் 314 ஆம் நூற்பா 283 ஆம் நூற்பாவோடும், 283 ஆம் நூற்பா 279 ஆம் நூற்பாவோடும், 279 ஆம் நூற்பா 263 ஆம் நூற்பாவோடும், 263 ஆம் நூற்பா ‘உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே’ (எழுத்து. 244, இளம்.) என்ற நூற்பாவோடும் ஒன்றன் முன் ஒன்றாக மாட்டேறு பெற்றுள்ளன.
மற்றொரு முறையாக ‘அளபெடைப் பெயரே அளபெடை இயல’ என்ற நூற்பா சொல்லதிகாரத்தினுள் நூற்பா எண்கள் 135, 141, 149 என்ற மூன்று இடங்களில் வருகிறது. இந்த மூன்று இடங்களும் ஒருங்கே இவற்றுக்கு முன்னர் அமைந்த ‘அளபெடை மிகூஉம் இகர இறுபெயர் இயற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப’ (சொல். 125, சேனா.) என்ற நூற்பாவோடு மாட்டேறு பெற்றுள்ளன.
தொல்காப்பியர் இவ்வாறு மாட்டேறு பெறுமாறு நூற்பாக்களைப் படைத்தது போன்று உரையாசிரியர்களும் மாட்டேறு உத்தியைப் பயன்படுத்திச் சில இடங்களில் உரை வரைந்துள்ளனர்.
அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே. (பொருள். 325, இளம்.)
என்ற நூற்பா உரையில் ‘உயிரளபெடை அசையாக நிற்கவும் பெறும் எ-று. உம்மை எதிர்மறையாகலான் ஆகாமை பெரும்பான்மை’ (பொருள். 325, இளம். ப. 90) என்றவாறு உரை எழுதியுள்ளார் இளம்பூரணர். அதாவது, செய்யுளில் உயிரளபெடை வரும்போது தேவைப்படின் அது அசையாகக் கொள்ளப்படும் என்பதே இந்நூற்பாவின் கருத்து. ‘ஆகலும் உரித்தே’ என்பதில் உள்ள உம்மையை எதிர்மறையாகக் கொண்டு அசை ஆகாமையே பெரும்பான்மை எனக் கூறுகிறார் இளம்பூரணர். அதற்கு அடுத்த நூற்பா,
ஒற்றள பெடுப்பினும் அற்றென மொழிப. (பொருள். 326, இளம்.)
என்றவாறு அமைந்துள்ளது. இந்நூற்பா உரையில் ‘ஒற்று அளபெடுத்து வரினும் அசைநிலையாகலும் உரித்து எ-று மாட்டேற்று வகையான் ஆகாமை பெரும்பான்மை’ (பொருள். 326, இளம். ப. 91) என்று உரை எழுதி, மாட்டேறு என்னும் உத்தியைப் பயன்படுத்தி ஒற்றளபெடையும் செய்யுளில் அசையாகக் கொள்ளப்படுவது பெரும்பான்மை இல்லை என்ற பொருளை வருவித்துக் கொண்டுள்ளார் இளம்பூரணர்.
எடுத்துக்காட்டுகளை மாட்டேற்றால் கொண்டுவந்து இணைத்துள்ள இடங்களும் இளம்பூரணர் உரையில் அமைந்துள்ளன.
மூன்றன் ஒற்றே வந்த தொக்கும். (எழுத்து. 447, இளம்.)
எழுத்ததிகார குற்றியலுகரப் புணரியல் பகுதியுள் இடம்பெற்றுள்ள இந்நூற்பா மூன்று என்னும் எண்ணுப் பெயருக்கான புணர்ச்சி விதி ஒன்றைக் கூறுகிறது. இதனைத் தொடர்ந்த அடுத்த நூற்பா ஐந்து என்னும் எண்ணுப் பெயர்பற்றியதாக உள்ளது. நான்கு என்னும் எண்ணுப் பெயருக்கான விதியைக் கூறும் நூற்பா தொல்காப்பியரால் அமைக்கப்படவில்லை. காரணம் நான்கு என்னும் எண்ணுப்பெயருக்கும் மூன்று என்னும் எண்ணுப்பெயருக்கும் விதி ஒன்று என்பதே. இதை நன்றாக உள்வாங்கிக்கொண்ட இளம்பூரணர், மேற்கண்ட நூற்பா உரையில் ‘மூன்றன் ஒற்று வந்தது ஒக்கும் - மூன்றாம் எண்ணின்கண் நின்ற னகார ஒற்று வருமொழியாய் வந்த அளவுப்பெயர் நிறைப்பெயரின் முதலில் வந்த ஒற்றோடு ஒத்த ஒற்றாய் முடியும் எ-று. எ-டு முக்கலம், சாடி, தூதை, பானை எனவும் முக்கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும். மாட்டேற்றானே நாற்கலம், சாடி, தூதை, பானை எனவும் நாற்கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும்’ (எழுத்து. 447, இளம். பக். 258, 259) என்றவாறு மாட்டேற்றால் நான்கு என்னும் எண்ணிற்குரிய எடுத்துக்காட்டுகளையும் இந்நூற்பா உரையிலேயே எடுத்துக்காட்டியுள்ளார்.
தொல்காப்பியச் செய்யுளியல் முதல் நூற்பாவில் குறிக்கப்பெற்றுள்ள செய்யுள் உறுப்புகளுள் ஒன்றான ‘மாட்டு’ என்பதும் இம்மாட்டேறு என்னும் உத்தியோடு ஒப்பவைத்து எண்ணத்தக்கதாய் உள்ளது.
1 comment:
புதிய & பயனுள்ள பதிவு
வாழ்த்தும் நன்றியும் பற்பல..
Post a Comment